Pages

Thursday 1 December 2011

ஆப்பிள் துண்டுகள்

[ என்னுடைய தனித்து விடப்பட்ட பயணம் "கலங்கரை விளக்குகளுடன்" அடுத்த வாரம் தொடரும்] 


கோவையில், எனது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் ஒரு தனியார் அலுவலகத்தில் பணி புரிபவள் நான். 

ஒரு வார உழைப்புக்கு பிறகு, நான் ஆவலுடன் எதிர் பார்த்த வார விடுமறை நாட்கள் வந்தன..உற்சாகமாய் கிளம்பினேன் வீட்டுக்கு..இல்லை இல்லை விடுதிக்கு..  

ஆம்..அலுவலகத்தில் இருந்து போய் வரும் தூரத்தில் நானும் என் தோழிகளும் விடுதியில் தங்கியிருந்தோம்.. விடுதிக்கு போய் கொண்டிருக்கும் போதே என் அறைத் தோழி நித்யாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது..

"Started to home thala.. take care.. Meet you on monday.."

(thala- சத்தியமாக அவள் வைத்த பெயர் தான்..)

"Ok..thala..Take care" என்று நானும் பதிலுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டேன்.

இந்நேரம் நிர்மலாவும் ஊருக்கு கிளம்பி இருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்..

வாரக் கடைசி என்பதால் எங்கள் விடுதியில் பெரும்பாலானோர் ஊருக்குப் போவது வழக்கம்..நான் அதிக ஊருக்கு போவதில்லை. இந்த மழையில் போய் அல்லல் பட வேண்டாமே என்று இம்முறை போக வில்லை..அறையில் வேறு யாருமில்லை... நன்றாக சாப்பிட்டுவிட்டு இழுத்து போர்த்தி விட்டு படுத்து தூங்கினேன்..

அடுத்த நாள் சனிக் கிழமை.. மழை என்னை எங்கேயும் வெளியே போக அனுமதிக்கவில்லை..சாப்பிடுவதும் தூங்குவதுமாக சனிக் கிழமையை கழித்தேன்.. ஞாயிற்றுக் கிழமைக்கு பொழுது புலர்ந்தது..

முகப் புத்தகத்தில் கொஞ்ச நேரம்..

விடுதி தொலைக்காட்சியுடன் கொஞ்ச நேரம்..

போதாத குறைக்கு, கதை எழுதுகிறேன் என்ற பெயரில் காகிதத்தை கசக்கியது தான் மிச்சம்..

அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.. நித்யாவை செல்பேசியில் அழைத்தேன்..

"Hiiiiii தல..எப்ப வருவ..?? ரொம்ப போரடிக்குது.." 

"நாளைக்கு காலைல வந்துருவேன் தல.." என்றாள்..

இத்தோடு நான்கைந்து மொக்கைகளையும் சேர்த்து போட்டு விட்டு அழைப்பை துண்டித்தேன்.. வேறு வழியில்லாமல் மறுபடி தூங்கினேன்..எழுந்த போது இருட்டியிருந்தது..

மாலை ஆறு மணி.. எழலாமா வேணாமா என்ற யோசனையில் இருக்கும் போது, " எழுந்து என்னத்த இப்போ கிழிக்க போறோம்" என்று மறுபடி போர்வைக்குள் போனேன்..

யாரோ தட்டி எழுப்பியது போல் இருந்தது.. போர்வையை விலக்கி விட்டுப்  பார்த்தால் நித்யா நின்று கொண்டு இருந்தாள்..

"என்ன தல, காலைல தான்  வருவேன்னு சொன்ன..? இப்பவே வந்துட்ட..? " என்றேன்..

"எல்லாம் காரணமா தான்.." என்றாள்..

"என்ன காரணம் தல..? இங்க எவ்வளவு போரடிச்சது தெரியுமா? match பார்த்தியா?
ஒரு run ல டிரா ஆயிடுச்சு..ம்ம்ம் அப்புறம் கலங்கரை விளக்கு பத்தி எழுதிட்டேன்.." என்று நான் லொட லொடவென்று பேசிக் கொண்டே இருந்தேன்.. ஆனால் அவள் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூடபேசவில்லை..
என்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

"என்ன ஆச்சு தல..?? உடம்பு சரியில்லையா? "என்றேன்.. அதற்கும் பதில் இல்லை..அப்போது தான் நான் அவளை நன்றாக கவனித்தேன்..பார்க்கவே ரொம்ப வித்தியாசமாக இருந்தாள்.

அவளுக்கு சுருட்டை முடி இருக்கும்.. ஆடை அணியும் விதமே தனி அழகாக இருக்கும்..கையில் கூர்மையான நகங்கள் இருக்கும்..உயிரை விட்டாலும் விடுவாளே தவிர, தன் நகங்களை வெட்ட அவள், ஒரு நாளும் அனுமதித்ததே இல்லை..ஆனால் இன்றோ அப்படி ஒரு நித்யாவை  நான் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை..

முகத்திற்கு மஞ்சள் போட்டிருந்தாள்.. நகங்கள் வெட்டப் பட்டிருந்தன..அன்று அவள் உடுத்தியிருந்த ஆடையையும், அதற்கு முன்னர் அவள் உடுத்தி நான்  பார்த்ததே இல்லை..  நெற்றியில் ஒரு தழும்பும் புதிதாக தென் பட்டது..

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, " என்ன பிரியா, யோசிக்கற..?" என்றாள்..

எனக்கு சரக்கென்று குத்தியது..அவள் இது வரை என்னை பிரியா என்று பெயர் சொல்லி  அழைத்ததே இல்லை.. 

"ஒண்ணுமில்ல..சும்மா தான்.." என்றேன்..

"உன் mobile குடேன்.ஒரு கால் பண்ணிட்டுத் தரேன் " என்றாள்..

"உன் mobile எங்க" என்று கேட்டேன்.. மழுப்பினாள்.. "balance இல்ல".. என்று நானும் மழுப்பினேன்..

mobile ஐ குடுத்திருக்கலாமோ என்று தோன்றியது..  

என்ன ஆச்சு இவளுக்கு என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

"உன் பேரே தெரியாது.." என்று என் செல்பேசி பாடியது..

பார்த்ததும் அதிர்ந்தேன்..அழைப்பது நித்யா.. ஆம், என் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் அதே நித்யா தான்..

அமைதியாய் அழைப்பை இணைத்தேன்..

எடுத்தவுடன் 'தல' என்றது குரல்.. அது அவளது குரல் தான்..

"சொல்றத மட்டும் கேளு தல.. எதுவும் பதில் பேசாத..! அவ இந்நேரம் உன்ன தேடி வந்துருப்பா..,! அங்க இருக்காத..ஆப்பிள் சாப்பிடாத..!" 

என்றபடி இணைப்பு துண்டிக்கப்  பட்டது.. சொல்லி வைத்தாற்போல அவள், தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து, ஆப்பிளை எடுத்து நறுக்கி கொண்டிருந்தாள்..

இவள் யார்..? பார்க்க நித்யா மாதிரி தான் இருக்கிறாள்..அது என்ன நித்யா மாதிரி..? நித்யா தான்..அப்போ நான் செல்பேசியில் பேசியது யாரிடம்..?? எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. ஒரு முறை நித்யா எண்ணிற்கு அழைத்தால், எலாம் புரிந்து விடும் என்று தோன்றியது..

என் தம்பிக்கு இன்று பிறந்த நாள்..வாழ்த்து சொல்லி விட்டு வருகிறேன் என்று வெளியே போக எழுந்தேன்..

Loud speaker இல் போடு.. நானும் வாழ்த்துகிறேன் என்றாள்..அவள் என்னை வெளியே விடுவதாக இல்லை என்பது  நன்றாக தெரிந்தது..

குடு குடுவென்று ஓடி விடலாம் என்று பார்த்தால், எங்கே இவள் பாய்ந்து வந்து கையில் வைத்திருக்கும் கத்தியால் என்னை குத்தி விடுவாளோ என்கிற பயம் எனக்கு.. 

சரி, நான் சாப்டுட்டு வரேன் என்று நழுவப்  பார்த்தேன்.. உனக்கு கொடுக்கத் தான் ஆப்பிள் நறுக்கி கொண்டிருக்கிறேன் என்றாள்..எனக்கு தூக்கி வாரிப் போட்டது..முதலில் அவள் நித்யா தானா என்பது எனக்கு தெரிய வேண்டும்.. மெல்ல பேச்சுக்  கொடுத்தேன்..

"தங்கச்சி இபோ எப்டி இருக்கா தல..?" என்றேன்.. அவளுக்கு தங்கை இல்லை என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும்..

ம்ம்ம்..நல்லாருக்கா...என்று சொன்னது தான்.. எனக்கு உடம்பு எல்லாம் வேர்த்தே போய் விட்டது.. என்ன ஆனாலும் பரவாயில்லை, எழுந்து வெளியே போயே தீர வேண்டும் போல இருந்தது.. எதுவும் பேசாமல், எழுந்து வெளியே வந்தேன்.. நித்யாவை செல்பேசியில் அழைத்தேன்..

"நீங்கள் டயல் செய்யும் வாடிக்கையாளர், தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.." என்று பதிவு செய்யப்பட்ட குரல் சொன்னது தான் தாமதம், உடனே என் அறை இருந்த தளத்தின் கீழ் தளத்திற்கு ஓட்டம் பிடித்தேன்.. அங்கு தான் என் கல்லூரி சீனியர் அக்கா ஒருவர் தங்கியிருந்தார்.. இந்த விடுதியில், என் தோழிகள் இருவரை தவிர தெரிந்த ஒரே முகம் அவர் தான். 

நடந்ததை சொல்லி என் அறைக்கு அழைத்து வந்தேன்.. அங்கே தான் எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது..

நித்யா வந்ததற்கான ஒரு அடையாளம் கூட அங்கு இல்லை.. தட்டு கவிழ்த்து வைக்க பட்ட அதே இடத்திலேயே இருந்தது.. ஆப்பிள் துண்டுகளும் இல்லை..

"என்ன டி எதையாது பார்த்து பயந்துட்டியா??" என்றார் ஜோன் அக்கா..

"இல்லக்கா அது வந்து..."என்று சொல்வதறியாது பிதற்றினேன்..

"போய் சாப்டுட்டு படு.. பயமா இருந்தா, என் ரூமுக்கு வா.."  என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் நித்யாவிடமிருந்து அழைப்பு வந்தது..

செல்பேசியை காதில் வைத்தேன்..

"உன்னைத தேடி அவ  நிச்சயம் வருவா தல.. அங்க இருக்காத.. ஆப்பிள்  சாப்டாத.."  

என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அழைப்பை Loud speaker இல் போட்டேன்..

"ஹலோ... ஹலோ... தல.." என்றாள் அவள்..

"ஹலோ நித்யா எங்க இருக்க..?? நான் ஜோன் பேசறேன்.."

"சொல்லுங்க கா.. நா வீட்ல தான் இருக்கேன்.." என்றாள் சாதாரணமாக..

"என்னது..?? வீட்ல இருக்கியா??

அப்போ நீ இங்க வரவே இல்லையா?? அப்போ இந்த பொண்ணு யாரு..??
ஆப்பிள் சாப்டாதனு லாம் சொன்ன..??

என்ன விளையாடுறியா.. ??"என்று கத்தினேன்..

என்ன தல ஒளருற..??நா இங்க தான் இருக்கேன்.. காலைல வரேன்னு சொன்னேன்ல.. இரு அம்மா பேசறாங்க என்று கொடுத்தாள்..  ஆமாம், அவள் வீட்டில் தான் இருக்கிறாள் என்று உறுதி படுத்திக் கொண்டேன்..

அப்போ வந்தது யார்.? ஒரு வேளை கனவாக இருக்குமோ..??

ஜோன் அக்கா தலையில் தட்டினார்.. சுய நினைவுக்கு வந்தேன்..

ச..எல்லாம் பிரம்மை.. என்று எனக்கு நானே சமாதானம் படுத்திக் கொண்டு, விடுதியின் உணவறைக்கு உண்ணச் சென்றேன்.. தட்டை கழுவி விட்டு, சப்பாத்தி வாங்க, பரிமாறுபவரிடம் தட்டை நீட்டினேன்..

"என்னம்மா இது..??" என்றார் அவர்..

எனது தட்டில் வெட்டப் பட்ட ஆப்பிள் துண்டுகள் இருந்தன..அலறியடித்து தட்டை அப்படியே கீழே போட்டேன்.. என்னைச் சுற்றி நடப்பவை எதுவுமே எனக்கு புரியவில்லை.. நெஞ்சு பட படவென்று அடித்தது..

ஜோன் அக்கா அறையை தேடி கால்கள் ஓடின.. காலில் ஏதோ பிசு பிசுப்பது போல இருந்தது.. காலுக்கடியில் மற்றொரு ஆப்பிள் துண்டு..

போகும் வழியெல்லாம் ஆப்பிள் துண்டுகள்..

இல்லை இல்லை..  ஆப்பிள் துண்டுகள் இருந்த வழியில் தான் நான் போய்க் கொண்டிருந்தேன்..

கடைசி ஆப்பிள் துண்டு இருந்த இடத்தில் என் அறை இருந்தது.. அறைக் கதவை திறந்தேன்.. அங்கே அவள் இருந்தாள்...

நித்யாவாகிய அவள்..

"ஏய்.. நீ யார்..? உனக்கு என்ன வேணும்..நீ நித்யா இல்லையே.." என்றேன் பயம் கலந்த தைரியத்துடன்..

"நான் நித்யாவென்று உன்னிடம் சொல்லவில்லையே.." என்றாள்..

"நீ நித்யா இல்லையென்றால், வேறு யார்..??" என்றேன்..

"என் பெயர் ரஞ்சனி.." என்றாள்..

"ரஞ்சனியா..? இது என் தோழியின் கதாபாத்திரத்துக்கு வைத்த கற்பனை பெயராயிற்றே.." என்று நினைத்தேன்..

"ஆம்.. நீ நினைப்பது சரி தான்.. உன் "எனக்குள்ளே" என்ற கதையை படித்தேன்.. அது கதையல்ல.. என் நிஜம்.." என்று பேச ஆரம்பித்தாள்..

"என் பெயர் ரஞ்சனி..அவள் பெயரும் அது தான்.. சிவ ரஞ்சனி..

உன்னையும் உன் ரஞ்சனியையும் போலத் தான் நாங்களும் இருந்தோம்.. அதுவும் நீண்ட நாள் நீடிக்க வில்லை..

காதல் என்றாள் அவள்.. நான் ஒன்றும் காதலுக்கு எதிரி அல்ல..அவள் காதலனுக்கு எதிரி..ஏற்கனவே என்னிடம், என்னை காதலிப்பதாக சொல்லி தோற்றுப் போனவன் அவன்..அதற்கு பலி தீர்க்க, அவளை காதலிக்க ஆரம்பித்தான் அவன்..

அவன் என்னிடம் சொன்ன காதலை, அவளிடம் நான் சொல்லாதது தான் என் பெருங்குற்றம்... எச்சரித்தேன்.. ஆனால் அவள் நம்புவதாக இல்லை..கடைசியில் நான் கேட்டதும் அதே வார்த்தைகள் தான்..

"நான் நிம்மதியாக இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா என்று..?"

உனக்கு கிடைத்த மாதிரி கலங்கரை விளக்குகள்,எனக்கு கிடைக்க வில்லை..
பதிலுக்கு என்ன கிடைத்தது தெரியுமா??
.
.
.
.
.
.
.
 மரணம்...

நீ இந்த கதையை வெளியிட்ட அதே தினத்தில் தான் நான் இறந்தேன்..

எழுது..

உன் ரஞ்சனிக்கும், என் ரஞ்சனிக்கும்...ஏன் உலகில் உள்ள அத்தனை ரஞ்சனிகளுக்கும் சேர்த்து எழுது..

பிரியக் கூடாதது நட்பு என்று..!!!"

அன்புடன்,
தர்ஷினி.

Monday 21 November 2011

எனக்குள்ளே....

தனிமையை விரும்பாத, ஆனால் தனித்து விடப்பட்ட வாழ்க்கை பாதையில், ஒரு வழிப்போக்கன் நான்.. போய் சேருகிற இடம் தெரியாது.. ஆனால் போய் கொண்டிருக்கிற பாதை மட்டும் தெரியும்.. அது எப்படி..?

        கடலில் மிதக்கும் கப்பலுக்கு கலங்கரை விளக்கு வழி காட்டுமாம்.. அதே போலத் தான் எனக்குள்ளும் ஒரு கலங்கரை விளக்கு இருக்கிறது.. இல்லை.. இல்லை.. ஒன்பது கலங்கரை விளக்குகள்  இருக்கின்றன  என்று சொன்னால் இன்னும் சரியாய் இருக்கும்..

தனித்து விடபட்டிருந்தாலும், கற்களும் முற்களும்  நிறைந்திருந்த என் பாதையில், இரத்தினக் கம்பளத்தையும்  பூக்களையும் தூவியவை இந்த கலங்கரை விளக்குகள்  தான்..

யார் இந்த கலங்கரை விளக்குகள்..??

வாருங்கள், என்னுடைய தனித்து விடப்பட்ட இந்தப்  பாதையில்  சேர்ந்து பயணிக்கலாம்..

அப்போது நான் கல்லூரி  மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.. கல்லூரி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் close friend, best friend, hi friend, bye friend, girl friend, boy friend இன்னும் variety variety ஆக நண்பர்கள் இருப்பார்கள்..ஆனால் எனக்கு எல்லாமே அவள் தான்..

அவள் பெயர் ரஞ்சனி.. சாமார்த்திய சாலி.. அழகான கண்கள், ஆழமான பார்வை ,கூர்மையான மூக்கு, தைரியசாலி.. துரு துரு பொண்ணு.. வாழ்க்கையை எப்போதும் சந்தோஷாமாக வாழ்வதும்,கலகலப்பாய் இருப்பதும், கலாட்டா பண்ணுவதும் இவள் வாடிக்கை..வாழ்க்கையின் எந்த தருணத்திலும் centiment ஐ பார்த்திராத இருபதாம் நூற்றாண்டின் modern மங்கை இவள்..

மேலோட்டமாய் பார்க்க இருவரும் ஒரே குணாதிசியங்கள் கொண்டவர்களாய்  தான் தெரிவோம்..ஆனால் உண்மை அதுவல்ல..  அவளுக்கு enjoy பண்ண யாராது நான்கு பேர் கூட இருந்தால் போதும்.. ஆனால் எனக்கோ ரஞ்சனி வேண்டும்..

ரஞ்சனி வரலையா..? நானும் வரலை.. அவள் ஊருக்கு போகலையா..?? அவளை தனியா விட்டு விட்டு நான் மட்டும் ஊருக்கு போகனுமா?? என்று விடுதியிலேயே விடுமுறை நாட்களை கழித்தவள் நான்..

இவையெல்லாம் ரொம்ப நாள் நீடிக்க வில்லை.. நல்ல நண்பர்களுக்கிடையே விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லா விட்டால் எதற்கெடுத்தாலும் சண்டை தான்..

எத்தனை முறை தான் நானே விட்டு கொடுப்பது என்று ஒரு சண்டை..

போன முறை நான் தானே adjust பண்ணி போனேன்.. இந்த முறை நீ பன்றதுகென்ன..? இப்படி ஓர் சண்டை..

இதற்கெல்லாம் விட, கொஞ்சம் சகஜமாக இன்னொருத்தரிடம் நட்பாக  பழகி விட்டால் போதும்.. அதுவும் அந்த இன்னொருத்தர் எதிர்பாலாக(ஆண்/பெண்) இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம்..

நமக்கே நமக்கு என்றிருக்கும் உயிர் தோழி, நம்மை விட்டு பிரிந்து விடுவாளோ என்கிற  பயம் தான்  இவையனைத்திற்கும் காரணம்..

ஆம், இந்த பயம் தான் என்னையும் ரஞ்சனியையும் பிரித்தது..ஆனால் ரஞ்சனி முகத்தில் மட்டும் சிரிப்பு என்றைக்குமே மாற வில்லை.நானோ தாடி வைக்காத குறை தான்.. பெண்ணாய் போய் விட்டேனே..

என்ன தான் நெருங்கிய நண்பர்களாய் இருந்தாலும், ஒரு குறுகிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சகஜமாக பேசுவது கடினம் தானே...!

நாங்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்து படித்த எங்களது விடுதியின் தொலைக்காட்சி அரங்கத்திலேயே வெகு நேரம் அமர்ந்து எங்கள் நட்பின் பொன்னான நினைவுகளை நினைத்து பார்த்துக் கொண்டே இருப்பேன்..சில நேரம் நான் தான் தப்பு செய்து விட்டேனோ என்று தோன்றும்..அவ்வாறு தோணும் தருணங்களில், அவளிடம் போய் மன்னிப்பு கேட்குமாறு மனசாட்சி வற்புறுத்தும்..

நானும் ஒரு நாள் போனேன்..

"சீ.. நான் நிம்மதியா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?" என்று ரஞ்சனி..

ஊருக்கு போகும் போது விடுதி வாசல் வரை வழியனுப்பி விட்டது.. கொஞ்ச தூரம் போனதும், சாப்பிட்டு  விட்டு போ..தண்ணி எடுத்துகிட்டயா? என்று கேட்பது.. எழுந்தவுடன் குறுஞ்செய்தியில் Good Morning சொல்வது.. காலையில் அனுப்பிய Good Morning குறுஞ்செய்தியில் எங்கே smiley ஐ காணோம் என்று உரிமையோடு சண்டை போடுவது..Miss you சொல்வது..தேர்வுக்கு முன்னர் all the best சொல்வது..ஜோடியாக நடனம் ஆடியது..ஒன்றாக படித்தது.. படம் பார்த்தது..செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டது.. ஒன்றாக கொண்டாடிய பிறந்த நாட்கள்..பிறந்த நாள் பரிசுகள்..

இப்படி எதையுமே மறக்க முடியாமல் மீண்டும் அதே அரங்கத்தில் நான்..

கண்களில் கண்ணீருடன்..


ஆனால் அன்று எனக்கு தெரியவில்லை.. அது தான் நான் அழுகும் கடைசி கண்ணீர் துளிகள் என்று...........

நிஜமாக நான் இந்த தருணத்தில் ரஞ்சனிக்கு மனதார நன்றி சொல்லியே தீர வேண்டும்.. தனித்து விடப்பட்டப் பாதையில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் எனக்கு வழிகாட்ட ஒன்பது கலங்கரை விளக்குகளை கொடுத்ததற்கு..

ரொம்ப பெருமை வேண்டாம் ரஞ்சனி..

நீ கொடுக்கவில்லை..

உன் பிரிவு எனக்கு கொடுத்த பரிசு....

யாரந்த கலங்கரை விளக்குகள்...??? தொடர்ந்து பயணியுங்கள்...!!!!


அன்புடன்,
தர்ஷினி.